Tuesday, July 26, 2016

கபாலி மோசடி!

கபாலி மோசடி!




மிகப்பெரிய எதிர்பார்ப்பை செயற்கையாக உருவாக்கிக் கடந்த ஒரு வார காலமாக, ஊரெல்லாம் அதே பேச்சு என்பதாக "கபாலி', "கபாலி' என்று முழங்கிய ரஜினிகாந்தின் "கபாலி' திரைப்படம், அதற்கு முந்தைய கோச்சடையான், லிங்கா வரிசையில் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. திரைப்படம் வெற்றிப் படமா, தோல்விப் படமா என்பதல்ல பிரச்னை. ஒரு திரைப்படத்திற்கு இந்த
அளவுக்கான பரபரப்பும், அதிக அளவிலான கட்டணமும் சரியானதுதானா என்பதுதான் கேள்வி.

ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் "கபாலி ஜுரம்' என்று வர்ணிக்கப்பட்டு வெளியான தகவல்கள் தலைசுற்றலை ஏற்படுத்தியது. இதற்கு முன் எந்தவொரு இந்தியத் திரைப்படத்திற்கும் இல்லாத
அளவிலான சமூக வலைதளங்களின் மூலமான பரப்புரைகளும், செய்திகளும் ஏதோ யுகப் புரட்சியோ, சினிமா சுனாமியோ ஏற்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கின.
பெருநகரங்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை சராசரி ரூ.600 என்று கூறப்படுகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக ரூ.1000 கொடுத்து "கபாலி'
திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தன. விளைவு? ஆரம்ப காலத்திலிருந்து முந்தைய நாள் இரவிலேயே வரிசையில் படுத்திருந்து, முதல் காட்சியைப் பார்த்து, கைதட்டி, விசிலடித்து சாதாரணமாக இருந்த ரஜினிகாந்தை "சூப்பர்
ஸ்டார்' ரஜினிகாந்தாக மாற்றிய அடித்தட்டு அப்பாவி ரசிகனுக்கு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்புகூட மறுக்கப்பட்டது. ஏற்றிவிட்ட ஏணி எட்டி உதைக்கப்பட்டது!
ரூ.110 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அதன் தயாரிப்பாளர் "கலைப்புலி' எஸ். தாணுவுக்குப் படம் வெளியாகும் முன்பே ரூ.223 கோடியை சம்பாதித்துக் கொடுத்து விட்ட
தாகப் பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "கபாலி' திரைப்படத்திற்கு உருவாக்கப்பட்ட பரபரப்பையும் பரப்புரையையும் பார்க்கும்போது அந்த அளவிலான லாபத்தை ஈட்டித் தந்திருக்கக் கூடும் என்றுதான் தோன்றுகிறது.
கேரளத்தில் 306 தியேட்டர்களில் "கபாலி' திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக ஒரு தமிழ்த்
திரைப்படம் சீனம், மலாய், தாய், ஜப்பானிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் எடுத்துக் கொண்டால் வெறும் 15% தியேட்டர்களை (அதிலும் கூடப் பெரும்பாலானவை கிராமப்புறத் திரையரங்குகள்) தவிர்த்து, ஏனைய தியேட்டர்களில் எல்லாம் ரசிகர்கள் "கபாலி'
திரைப்படத்தை மட்டும்தான் பார்த்தாக வேண்டும் என்கிற நிலைமை உருவாக்கப்பட்டது. நன்றாகவே வசூல் செய்து கொண்டிருந்த "அப்பா' உள்ளிட்ட சில திரைப்படங்கள் "கபாலி'யை வெளியிடுவதற்காக
வலுக்கட்டாயமாகத் திரையரங்கிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட அவலம் (அயோக்கியத்தனம்) அரங்கேறியது.
இதெல்லாம் எதற்காக? அந்த அளவு கட்டணம் வசூலித்து, முதல் மூன்று நாள்களிலேயே போட்ட முதலை எடுத்துவிட வேண்டும் என்கிற தயாரிப்பாளரின் பேராசைதான் இதற்குக் காரணம். படம்
தோல்விப் படமாக அமைந்தாலும் தயாரிப்பாளர் தப்பித்துக் கொள்வார். தியேட்டர்காரர்களும், ரசிகர்களும்தான் ஏமாறுவார்கள். இது ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தைவிடப் பெரிய மோசடியாக அல்லவா இருக்கிறது?
எத்தனையோ எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள், ஏன் ரஜினி, கமல் படங்கள் கூட ஒரே நாளில் வெளியாகின. நல்ல திரைப்படம் வெற்றியடையும். நன்றாக இல்லையென்றால் தோல்வி அடையும். அதற்காக
அதிக விலைக்கு டிக்கெட் விற்பதோ, அந்த ஒரு திரைப்படத்தை மட்டுமே எல்லா தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதையோ வழக்கமாகக் கொண்டிருக்கவில்லையே. இப்போது இது என்னபுதிய ஏமாற்று வேலை?
தியேட்டருக்குக் கட்டணம் என்பதுபோய், நடிகர்களைப் பொருத்தும், திரைப்படங்களைப் பொருத்தும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் அவலம் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் நடை
முறைக்கு வந்திருக்கிறது. "எந்திரன்' திரைப்படத்திற்குப் பிறகுதான், இதுபோல அத்தனை திரையரங்குகளையும் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து திரைப்படத்தை ரிலீசாக்கிக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும், தோல்விப் படமாகவே இருந்தாலும் போட்ட முதலை எடுத்துவிடும் மோசமான வியாபார உத்தி நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது சம்பந்தப்பட்ட நடிகருக்குப் பெருமை சேர்க்காது; திரையுலகின்
ஆரோக்கியத்துக்கும் உதவாது.
50 நிறுவனங்களைக் கொண்ட டி.வி.எஸ். குழுமத்தில் 39,000 தொழிலாளர்கள் நிரந்தரமாக வேலை பார்க்கிறார்கள். அவர்களது ஆண்டு பற்றுவரவு ரூ.42,000 கோடி. முருகப்பா குழுமத்தின் 28 நிறுவனங்களில் 32,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களது வருடாந்திர விற்று வரவு ரூ.26,000 கோடி. அமால்கமேஷன் குழுமத்தில் 47 நிறுவனங்களில் 50 தொழிற்சாலைகள், 15,000-க்கு அதிகமான தொழிலாளர்கள். ஆண்டு பற்றுவரவு ரூ.9,300 கோடி. அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாத, அவர்களுக்கு முக்கியத்துவம் தராத ஊடகங்கள், "கபாலி' போன்ற திரைப்படங்
களுக்கு, அதிகபட்சம் ரூ.1,000 கோடி புரளும், சினிமா துறைக்கு இவ்வளவு முக்கியத்துவமும் விளம்பரமும் தருகின்றனவே, இதற்குக் காரணம் என்ன? ரசிகர்கள் முட்டாள்களாக இருப்பதுதானே!
"கெட்ட பயடா இந்தக் கபாலி' என்கிற வசனம் உண்மையிலும் உண்மை. அப்பாவி ரசிகர்களையும், மக்களையும் முட்டாளாக்கி, சம்பாதித்து விட்டார்களே!
source:denamani


First Published : 23 July 2016 03:18 AM IST

No comments:

Post a Comment